மாதேப்பட்டி மூங்கில் புதூரில் நெல் சாகுபடியை ஆய்வு செய்த கலெக்டர்


மாதேப்பட்டி மூங்கில் புதூரில் நெல் சாகுபடியை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 6 Sep 2018 10:30 PM GMT (Updated: 6 Sep 2018 9:37 PM GMT)

மாதேப்பட்டி மூங்கில்புதூரில் நெல் சாகுபடி பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் மாதேப்பட்டி மூங்கில்புதூர் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி பணிகளை கலெக்டர் டாக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையில் மொத்தம் 55 ஆயிரத்து 638 ஹெக்டேர் பரப்பளவில் சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணை வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது. வேளாண்மை துறை சார்பாக எந்திர நாற்று நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடிக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கலேரி, மரிக்கம்பட்டி, செம்படமுத்தூர் மற்றும் கூலியாளம் கிராமங்களுக்குட்பட்ட 1,000 ஏக்கர் நில பரப்பளவில் திருந்தி நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறை வேளாண்மை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் தழை சத்தான யூரியா பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அசாடிலாக்டின் எனும் தாவர பூச்சிக்கொல்லி இயற்கை மருந்தினை பயன்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகள் காக்கப்பட்டு, தீமை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுகிறது. இதனால் 20 சதவீதம் விளைச்சல் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ், தோட்டக்கலை அலுவலர் வானிலைஅரசு மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story