250 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் வெள்ளைசுப்பையா மரணம்


250 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் வெள்ளைசுப்பையா மரணம்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:14 AM IST (Updated: 7 Sept 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

250 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் வெள்ளைசுப்பையா மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேட்டுப்பாளையம், 


பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவர் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் 250-க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலைத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் மயங்கி விழுந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல், அஞ்சலிக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நடிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் நகரசபை சாந்திவனம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த நகைச்சுவை நடிகர் வெள்ளைசுப்பையாவுக்கு சாவித்திரி என்ற மனைவியும், தனலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும், தங்கம், பாசமலர் ஆகிய நாடகங்களிலும் வெள்ளை சுப்பையா நடித்துள்ளார்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டவர்.இவரது நடிப்பை பாராட்டி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கலைச்செல்வன் என்ற விருதினை வழங்கினார்.தமிழக அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த மாதம் 25-ந்தேதி கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள இசை கல்லூரியில் கலை திருவிழா நடந்தது.உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்த போதும் வெள்ளை சுப்பையா இந்த விழாவில் கலந்து கொண்டார். இதில் அவருக்கு பொற்கிழியுடன் கலை முதுமணி விருதை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story