காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு


காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sept 2018 4:18 AM IST (Updated: 7 Sept 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் அப் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பாளையக்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா வந்து பெண்களிடம் பேசினார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு குழாய்கள் மூலமாக 2 வாரங்களுக்கு ஒரு முறை 1 மணி நேரம் குடிநீர் திறந்து விடுவதாக கூறுகிறார்கள். ஆனால் 45 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவும், புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

இதற்கு உதவி ஆணையாளர், வாரம் ஒருமுறை குடிநீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். லாரி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story