இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்


இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:28 PM GMT (Updated: 6 Sep 2018 11:28 PM GMT)

இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை, 


தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் (15 வயது முதல் 29 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நலப் பணிகளுக்காக விருதுகள் இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் 15 வயதில் இருந்து 29 வயது (ஜனவரி 1-ந்தேதி) வரை இருக்க வேண்டும். மேலும் தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் இந்த விருதை பெற்றவர்கள் இந்த ஆண்டிற்கான விருதை பெற விண்ணப்பிக்க இயலாது.

மேலும் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது. இந்த விருது 25 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

இதேபோல் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பதிவுத் துறை சட்டம் 1860-ன் படி கடந்த 3 ஆண்டின் அமைப்பு தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகள் குறிப்பிட்டிருக்க வேண்டும். எந்த வித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் செய்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்கு முன் இந்த விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் அமைப்பிற்கு ரூ.2 லட்சம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

வருகிற 15-ந்தேதிக்குள் https://innovate.mygov.in/nya/ என்ற இணைய தள முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story