ரகசியம் சொல்லட்டுமா?
இஸ்ரோ உலகின் நவீன விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாகும். ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆரம்ப காலத்தில் மிக சாதாரணமாக இயங்கிய ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் முதல் ராக்கெட் 1963-ல் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இந்த ராக்கெட் பரிசோதனை நடந்தது. இதற்காக அங்கிருந்த தேவாலய வளாகத்தைத்தான் அலுவலகமாக மாற்றினார்கள். பொருட்களை போட்டு வைக்கும் அறைகள் ஆய்வகமாக மாறின. ஆரம்பகாலத்தில் அங்கே உணவகம் கிடையாது. வேலை செய்த இளம் விஞ்ஞானிகள் எல்லாம் சாப்பிடுவதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரம் ரெயில் நிலையம்தான் செல்வார்கள். அலுவலக பயன்பாட்டிற்காக ஒரேஒரு ஜீப்தான் இருந்தது.
முதல் ராக்கெட் ஏவப்பட இருந்தபோது ராக்கெட் பாகங்களை ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்ல சைக்கிளே பயன்பட்டது. ஏனெனில் முதல் ராக்கெட் சிறிய அளவில்தான் இருந்தது. ஏவுதளமும் சிறிய கிரேன் வடிவில்தான் இருந்தது. முதல் ராக்கெட் 120 கிலோமீட்டர் உயரம் வரையே பறந்து சாதனை படைத்தது. இருந்தாலும் இந்தியாவின் விண்வெளி பயண சரித்திரம் அது. தற்போது 50 ஆண்டுகளை கடந்துவிட்ட இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக முன்னேறிவிட்டது. அந்த தேவாலயம் உள்ள பகுதி விண்வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிட்டது. பழைய ராக்கெட், செயற்கை கோள்கள் எல்லாம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story