ஈரோட்டில் போலீஸ்காரர் அடித்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோட்டில் போலீஸ்காரர் அடித்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உறவினர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கடந்த 5–ந் தேதி ஈரோடு பவானி ரோடு பி.பி. அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் போலீசார் அந்த வண்டி எண்ணை வைத்து அது யார்? என பார்த்துள்ளனர். அப்போது அவர் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் ஐவுளி விற்பனை பிரதிநிதி அருண்குமார் (வயது 18) என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அன்று மாலை போலீஸ்காரர் ஒருவர் அருண்குமார் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம், ‘உங்கள் மகன் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் நிற்காமல் சென்று விட்டார். எனவே அவரை கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வாருங்கள்’ என்று கூறி உள்ளார்.
இதனால் அருண்குமாரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் அருண்குமாருக்கு அறிவுரை கூறி உள்ளனர். அப்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அருண்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அருண்குமாரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். வீட்டுக்கு வந்த அவர் தன்னை போலீஸ்காரர் அடித்துவிட்டாரே என மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண்குமார் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 100–க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒன்று கூடினார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அருண்குமாரின் தந்தை ராமசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் உறவினர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘அருண்குமார் தற்கொலைக்கு காரணமான போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அருண்குமாருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சம்பந்தப்பட்ட போலீசார் மீது இன்னும் 4 நாட்களுக்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து, ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அருண்குமாரின் உடலை வாங்கிச்சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.