கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததால் கைது: விருதுநகர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி மீது இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீதான வழக்கில் 200 பக்கம் கொண்ட இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விருதுநகர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை விருதுநகர் கோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஜூலை மாதம் 20–ந்தேதிக்குள்ளும், இறுதி குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 10–ந் தேதிக்குள்ளும் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி கடந்த ஜூலை 13–ந்தேதி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி முன்பு 1,160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை ஏற்கனவே தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, 2–வது மற்றும் இறுதி குற்றப்பத்திரிகையை விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி முன்பு தாக்கல் செய்தார். 200 பக்கங்களை கொண்ட இறுதி குற்றப்பத்திரிகை என அவர் தெரிவித்தார்.