தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி தொடங்கியது: அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேர் மருத்துவ படிப்பில் சேர நடவடிக்கை


தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி தொடங்கியது: அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேர் மருத்துவ படிப்பில் சேர நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2018 10:00 PM GMT (Updated: 7 Sep 2018 2:42 PM GMT)

தமிழகத்தில் 412 மையங்களில் ‘நீட்‘ தேர்வுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேர் மருத்துவ படிப்பில் சேர சிறப்பு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் 412 மையங்களில் ‘நீட்‘ தேர்வுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேர் மருத்துவ படிப்பில் சேர சிறப்பு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன்

நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் 412 மையங்களில் ‘நீட்‘ தேர்வுக்கான பயிற்சிகள் இன்று (நேற்று) முதல் தொடங்கி உள்ளது. இதுதவிர காணொலி காட்சி மூலமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் ‘நீட்‘ தேர்வு பயிற்சி மையத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் ‘நீட்‘ தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் ‘நீட்‘ தேர்வு எழுதினர். இதில் 1,472 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 பேருக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அரசு பள்ளி மாணவர்கள்

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று ‘நீட்‘ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் நமது மாநிலத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1,000 தேர்வு மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 1,000 மாணவர்கள் ‘நீட்‘ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 11–ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ.–க்கு இணையாக பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 3 லட்சம் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு

6, 7, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.

ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அவர்களிடம் ரகசியமாகவும் தெரிவிக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம். ஆசிரியைகள் கொடுக்கும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story