திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது; பக்தர்கள் குவிந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது; பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 Sept 2018 2:30 AM IST (Updated: 7 Sept 2018 8:41 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஆவணித் திருவிழா 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 9–ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்– வள்ளி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா 

இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முன்னதாக சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர் மேலக்கோவில் சென்றனர்.

இன்று தேரோட்டம் 

10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.

முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரோட்டமும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரோட்டமும், தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரோட்டமும் நடைபெறும். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் தேர்களை வடம் பிடித்து தேர்களை இழுத்து சென்று வழிபடுவார்கள். இரவில் சுவாமி–அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story