உடல் கருகிய நிலையில் விவசாயி பிணம் கொலை செய்யப்பட்டாரா?
திருக்கோவிலூர் அருகே உடல் கருகிய நிலையில் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 55), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதேஊரில் உள்ள முத்துவளவன் நகர் காலிமனையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மணலூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் இறந்து கிடந்த தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தங்கவேல் மகன் கணேசன் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் எனது தந்தையின் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை யாரும் முன்விரோதம் காரணமாக எரித்து கொலை செய்தார்களா? அல்லது வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.