அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு 250 பேரை ரத்ததானம் செய்ய வைக்கும் மாணவி


அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு 250 பேரை ரத்ததானம் செய்ய வைக்கும் மாணவி
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 6:29 PM GMT)

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்காக வாட்ஸ்–அப் குழு மூலம் 250 பேரை ஒருங்கிணைத்து ரத்ததானம் வழங்கி, அரசு கல்லூரி மாணவி ஒருவர் உயிர்காக்கும் சேவையாற்றி வருகிறார்.

மதுரை,

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிப்பவர் நர்மதா (வயது 19). இவர் சக மாணவ–மாணவிகளை திரட்டி ‘வாட்ஸ்–அப்‘ குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அந்த குழுவினருடன் சேர்ந்து, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு எப்போது எல்லாம் சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறதோ? அப்போது ரத்ததானம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இதனை அறிந்த பெரிய ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன், மாணவி நர்மதாவை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு சான்றிதழ் வழங்கினார்.

இதுகுறித்து மாணவி நர்மதா கூறியதாவது:–

கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட பிரதிநிதியாக இருக்கிறேன். பல்வேறு சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படும்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து என்னை அழைப்பார்கள். எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்றார்போல், கல்லூரியில் படிக்கும் மாணவ–மாணவிகள், எனக்கு தெரிந்தவர்களை அழைத்துச் சென்று மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் கொடுத்து வருகிறோம்.

ரத்தத்தின் வகையை பொறுத்து ‘வாட்ஸ்–அப்‘பில் குரூப் உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 250–க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ரத்தம் தேவைப்படும் போது ‘வாட்ஸ்–அப்‘ குரூப்பில் தகவலை பரிமாறி, ரத்த தானம் செய்து வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் 25–க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து சென்று பெரிய ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்திருக்கிறோம். நானும் இதுவரை 5 முறை ரத்த தானம் செய்திருக்கிறேன். எப்போதெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறதோ? அப்போதெல்லாம் எங்களை அணுகி ரத்தம் பெற்றுக் கொள்கிறார்கள்.

குறிப்பாக விபத்தில் காயம் அடைந்து அவசர சிகிச்சைக்கு வருகிறவர்களை காப்பாற்ற தேவைப்படும் ரத்தத்துக்கு எங்களை அழைப்பார்கள். இந்த சேவையினால் பலர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். உயிர்காக்கும் இந்த சேவையில் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.

இவ்வாறு நர்மதா கூறினார்.


Next Story