வியாசர்பாடி, 6 கார்கள், 2 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்


வியாசர்பாடி, 6 கார்கள், 2 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 7 Sep 2018 7:01 PM GMT)

வியாசர்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைத்து இருந்த 6 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு சாஸ்திரி நகர் 11, 13 மற்றும் 14-வது தெருக்களில் ஏராளமான வாகனங்கள் வீடுகளின் முன்பு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அப்போது நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல், கூச்சலிட்டபடி சாஸ்திரிநகர் வழியாக வந்தனர். அவர்கள், அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த 6 கார்கள், 2 ஆட்டோக்களின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை கற்களாலும், இரும்பு ராடுகளாலும் அடித்து நொறுக்கினர்.

இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் எழுந்து வந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் அந்த ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியில் வீடுகள் முன்பு நிறுத்தி இருந்த 12-க்கும் மேற்பட்ட வாகனங்களை மர்மநபர்கள் நள்ளிரவில் அடித்து நொறுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் கஞ்சா போதையில் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் ரவுடி கும்பல், இதுபோல் சாலையோரம், வீடுகள் முன்பு நிறுத்தி இருக்கும் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story