போரூர் மேம்பாலத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் தாயுடன் கல்லூரி மாணவர் பலி


போரூர் மேம்பாலத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் தாயுடன் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 8 Sept 2018 3:45 AM IST (Updated: 8 Sept 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

போரூர் மேம்பாலத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், தாயுடன் சேர்ந்து கல்லூரி மாணவரும் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஜமுனா (வயது 37). இவருடைய மகன் காமேஷ் (19). இவர், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டில் உள்ள ஜமுனாவின் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஜமுனா, தனது மகன் காமேஷூடன் இருசக்கர வாகனத்தில் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தை காமேஷ் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஜமுனா அமர்ந்து இருந்தார்.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் மேம்பாலத்தில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.

இதில் தாய்-மகன் இருவரது தலையும் லாரியில் பலமாக மோதியதால், பலத்த காயம் அடைந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தாய்-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ராஜசேகர் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பைபாஸ் சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், அந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததாலும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.

இந்த சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளது. அதில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கும் பணத்தை கொண்டு இந்த பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்கலாம். சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தாமல் இருக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story