தர்மபுரி பஸ் நிலையம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்


தர்மபுரி பஸ் நிலையம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2018 4:45 AM IST (Updated: 8 Sept 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தர்மபுரி பஸ்நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்களில் சென்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தர்மபுரி பஸ்நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி பஸ்நிலையத்தில் திரண்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையை மறித்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் டவுன் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஏற்கனவே வைத்த கோரிக்கையின்படி காலை, மாலை நேரங்களில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story