சூலூர் அருகே லாரி மீது பஸ் மோதி தனியார் கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி பலி


சூலூர் அருகே லாரி மீது பஸ் மோதி தனியார் கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 8 Sept 2018 3:30 AM IST (Updated: 8 Sept 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியை உடல் நசுங்கி பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூலூர்,

திருச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவருடைய மகள் அழகு ஜோதி (வயது 27). இவர் திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வர முடிவு செய்தார். அதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

அந்த பஸ் அதிகாலை 4 மணிக்கு சூலூர் அருகே வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ் அந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் அந்த பஸ்சில் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த அழகுஜோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் ஜினியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அழகு ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story