முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்பட்ட தேக்கு கட்டைகள் பறிமுதல், தொழிலதிபர் கைது
முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்பட்ட தேக்கு மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் புதுவையை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து தேக்கு மரக்கட்டைகளை வெட்டி விற்பனை செய்ததாக முருகன் உள்பட 6 பேரை கடந்த 31–ந் தேதியன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெட்டப்பட்ட தேக்கு மரக்கட்டைகள் புதுவை மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் வனசரக அலுவலர் நெல்லைநாயகம் தலைமையில் வனத்துறை அலுவலர் பரத், வன காப்பாளர் மரியராஜ், காவலர்கள் ரமேஷ்பாபு, சக்திமுருகன், மாரியப்பன், பசுங்கிளி, வேல்முருகன், வேல்சாமி தனிப்படை போலீசார் புதுவை விரைந்தனர்.
அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கார்த்திகேயன் நெல்லைக்கு சுற்றுலா பயணியாக வந்து தேக்கு கட்டைகளை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய அட்டை கம்பெனி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 70 தேக்கு மரக்கட்டைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
அதையடுத்து தனிப்படையினர் கார்த்திகேயனை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து சென்றனர். நெல்லை வனத்துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி வனத்துறையினரும், காவல்துறையினரும் உறுதுணையாக இருந்தனர்.