மணல் பதுக்கி வைத்திருப்பது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தவர் மீது தாக்குதல்


மணல் பதுக்கி வைத்திருப்பது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:39 AM IST (Updated: 8 Sept 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே மணல் பதுக்கி வைத்திருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்த முதியவரை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர்,


திருவெறும்பூர் பகுதியில் காவிரி மற்றும் கல்லணை கால்வாய் ஆற்றில் நாள்தோறும் அதிக அளவில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதற்கு சில அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளதாக பொதுமக்களே கூறுகின்றனர்.
சில இடங்களில் மணல் அள்ளி வரும் லாரிகள், டிராக்டர்கள், மினிலாரிகளை திருவெறும்பூர் போலீசாரும், வருவாய்துறையினரும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தனர்.
இந்த சம்பவம் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தார்.

காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நசீர்பாட்சா(59). இவர் அந்தப் பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்கள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு புகார் கடிதம் போடுவாராம். அதனால் இவர்தான் திருவெறும்பூர் போலீசாருக்கு மணல் பதுக்கி வைத்திருப்பது பற்றி தகவல் கொடுத்திருக்க கூடும் என்று கருதி மணல் பதுக்கல் கும்பலை சேர்ந்த மாதவன், ஆல்பர்ட் ஆகிய இருவரும் சேர்ந்து நசீர்பாட்சாவை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த நசீர்பாட்சா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நசீர்பாட்சா திருவெறும்பூர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதவன், ஆல்பர்ட் ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story