‘ஏற்கனவே உள்ள வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’


‘ஏற்கனவே உள்ள வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’
x
தினத்தந்தி 8 Sept 2018 3:00 AM IST (Updated: 8 Sept 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

யாரையும் கட்டாயப்படுத்தி ரேஷன் கார்டை மாற்றச் சொல்லவில்லை என்றும், ஏற்கனவே உள்ள வழிமுறைகள் குறித்து தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

தேனி,


ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தாங்கள் பொருட்கள் வாங்காத நிலையில் பொருட்களை விட்டுக் கொடுப்பதற்காக உள்ள வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்து உள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பொருட்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைப்பதற்கும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் தேனி மாவட்டத்தில் நிறைய கூட்டங்களில் இதுதொடர்பாக பேசப்பட்டு உள்ளன. இதில் முதற்கட்டமாக அரசு அதிகாரிகள் யாரெல்லாம் ரேஷன் அரிசி வாங்காமல் இருந்தால் அதற்கு ஏற்ப கார்டை மாற்றிக் கொள்ளலாம் என ஆலோசித்தோம். நிறைய அதிகாரிகள் தாங்கள் பொருட்கள் வாங்காத நிலையிலும், தங்களின் செல்போனுக்கு பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து, அதிகாரிகள் தானாக முன்வந்து பொருட்கள் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளனர். அரசு பணியாளர்கள் தரப்பில் 160 பேர் ரேஷன் பொருட்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இது ஏதோ புதிய திட்டம் போல் எண்ண வேண்டாம். ஏற்கனவே இதற்கு இணையதள முகவரியில் வழிமுறைகள் உள்ளன. செல்போன் செயலியிலும் இதற்கான வழிமுறைகள் உள்ளன. ஏற்கனவே இருப்பதை தான் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

அரிசி வேண்டாம் என்று சொன்னால் தானாகவே ஒதுக்கீடு நிறுத்தப்பட்டு விடும். அரிசி வேண்டாம் என்று சொல்லி ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளும் போது 3 கிலோ கூடுதல் சர்க்கரை தானாகவே சேர்ந்து விடும். எந்த பொருளும் வேண்டாம் என்று விட்டுக் கொடுக்க விரும்புபவர்களும் விட்டுக் கொடுக்கலாம். வெளியூர், வெளிநாடுகள் செல்பவர்கள் தற்காலிகமாக பொருட்களை விட்டுக் கொடுக்கலாம்.

இதுதொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் தரப்பிலும் இதுவரை 40 பேர் அரிசி வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து சர்க்கரை ஒதுக்கீடு தலா 3 கிலோ வீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பொருட்கள் வேண்டாம் என்று விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. முழுவதும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான். ஏற்கனவே பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே பொருட்கள் வாங்காமல் இருப்பவர்கள் அதை உறுதிப்படுத்தும் வகையில் தங்களின் விருப்பத்தின் பேரில் பொருட்களை விட்டுக் கொடுக்கலாம் என்று தான் கூறி வருகிறோம்.

பொருட்கள் வாங்கும் மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். வாங்காதவர்களின் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தடுக்கப்படும். விட்டுக் கொடுப்பவர்களுக்கு அரசு வழங்கும் மானியம் வீணாகாமல் அந்த நிதியை வேறு திட்டங்களுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், பறக்கும் படைகள் மூலம் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக சுமார் 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற சட்டவிரோத பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்கவும் இந்த முறை உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story