ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2018 4:09 AM IST (Updated: 8 Sept 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு ராமலிங்க வள்ளலார் தெரு, ஜீவரத்தினம் தெரு, அப்பாய் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்காக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் சேலம்-கடலூர் ரோட்டில் ஆத்தூர் மந்தைவெளி பகுதியில் காலிக்குடங்களுடன் ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறித்ததும் ஆத்தூர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி அலுவலர்கள், குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து 11 மணி அளவில் பெண்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதன் காரணமாக ½ மணி நேரம் சேலம்-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஆத்தூர் நகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பன்னீர்செல்வம் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கைலாசநாதர் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரி நேற்று மதியம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ஆத்தூர் நகராட்சிக்கு குடிநீர் வரும் பிரதான குழாயில், உடையாப்பட்டி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தான் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பு சரி செய்தவுடன் மீண்டும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story