தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்


தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:41 PM GMT (Updated: 7 Sep 2018 11:41 PM GMT)

விருத்தாசலம் அருகே தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

விருத்தாசலம், 


விருத்தாசலம் அருகே உள்ள புதுக்குப்பம் கிராம மக்கள் நேற்று வக்கீல் புஷ்பதேவன் தலைமையில் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். அங்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் அனைத்தும் பழுதானதால், குடிநீருக்காக அவதியடைந்து வருகிறோம்.

இந்நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக அவர் தனது வீட்டின் அருகிலேயே ஆழ்துளை கிணறு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எங்கள் பகுதியில் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் எங்கள் பகுதியில் தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போது எங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கிராம மக்கள், விரைவில் தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். 

Next Story