போலீஸ் நிலையத்தில் ஆஜரான தந்தை சாமியிடம் சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டு ஒப்படைப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற முடிவு


போலீஸ் நிலையத்தில் ஆஜரான தந்தை சாமியிடம் சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டு ஒப்படைப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற முடிவு
x
தினத்தந்தி 8 Sep 2018 9:15 AM GMT (Updated: 8 Sep 2018 9:15 AM GMT)

போலீஸ் நிலையத்தில் ஆஜரான தந்தை சாமியிடம் சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை போலீசார் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி, 

போலீஸ் நிலையத்தில் ஆஜரான தந்தை சாமியிடம் சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை போலீசார் ஒப்படைத்தனர். எனவே, பழைய பாஸ்போர்ட்டு கேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவர்கள் திரும்ப பெற முடிவு செய்துள்ளனர்.

ஆராய்ச்சி மாணவி

சென்னையில் இருந்து கடந்த 3-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா (28) கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் சோபியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணைக்காக சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக புதிய பாஸ்போர்ட்டுடன் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு, சோபியாவின் தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஒப்படைப்பு

அதன்பேரில் சோபியாவின் தந்தை சாமி நேற்று இரவு 7.05 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் வக்கீல்கள் அதிசயகுமார், சந்தனசேகர் ஆகியோர் சென்றனர். அங்கு போலீஸ் விசாரணைக்காக நோட்டரி சான்றிதழ் பெறப்பட்ட புதிய பாஸ்போர்ட்டின் நகலை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே பறிமுதல் செய்து வைத்து இருந்த சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை, அவருடைய தந்தை சாமியிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சுமார் 7.20 மணிக்கு அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

பின்னர் வக்கீல் அதிசயகுமார் கூறியதாவது:-

2 மாத விடுமுறையில்...

சோபியாவின் பாஸ்போர்ட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக கொடுக்குமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் அழைப்பாணை அனுப்பினர். அதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி உள்ளோம். புதிய பாஸ்போர்ட்டின் நகல் நோட்டரி சான்றிதழ் பெற்று ஒப்படைத்து உள்ளோம். விசாரணைக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து உள்ளோம். போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரி சோபியாவிடம் இருந்து ஏற்கனவே பெற்ற பழைய பாஸ்போர்ட்டை திருப்பி தந்து விட்டார்.

இந்த விசாரணைக்காக சோபியாவுக்கு எந்த அழைப்பணையும் வரவில்லை. அவருடைய தந்தைக்குதான் வந்தது. சோபியாவின் பாஸ்போர்ட்டை இதுவரை யாரும் முடக்கவும் இல்லை. விசாரணைக்கு உட்படுத்தவும் இல்லை. அசல் பாஸ்போர்ட் எங்களிடம்தான் உள்ளது. சோபியா 2 மாத விடுமுறையில் வந்து உள்ளார். விடுமுறை முடிந்ததும் தொடர்ந்து கல்வி பயில கனடாவுக்கு செல்கிறார்.

மனுவை திரும்ப பெறுவோம்

எங்களுக்கு எதற்காக அழைப்பாணை வந்ததோ, அதனை மட்டுமே நாங்கள் பேசினோம். தமிழிசை சவுந்தரராஜன் மீது சோபியாவின் தந்தை சாமி கொடுத்த புகார் விசாரணை அதிகாரியிடம் நிலுவையில் உள்ளது.

சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். அதனை திரும்ப பெற உள்ளோம். சோபியாவுக்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. அவர் நல்ல மனநிலையில் உள்ளார். சோபியாவுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவாக இருப்பது, இந்த குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நல்ல பயனை தரக்கூடியது. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். மாணவி சோபியா விவகாரம் அரசியலாக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அடிப்படை உரிமைகளை, கருத்துரிமையை சமூகத்துக்கு பரவலாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story