திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 8 Sep 2018 9:15 PM GMT (Updated: 8 Sep 2018 1:49 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஆவணித்திருவிழா 

அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 30–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

10–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

தேரோட்டம் 

அதிகாலை 5.35 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 6 மணிக்கு கோவில் நிலையை மீண்டும் வந்து சேர்ந்தது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோ‌ஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேரின் முன்பாக தெய்வானை யானை சென்றது. இளைஞர்கள் தேருக்கு தடி போட்டனர். காலை 7.20 மணிக்கு தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

திரளான பக்தர்கள் 

பின்னர் காலை 7.30 மணிக்கு வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 8 மணிக்கு மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில் இணை ஆணையர் பாரதி, நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மனோரஞ்சிதம், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், வரதராஜன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், அரசகுரு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக, திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலையில் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஏராளமான தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு நீர் மோர், பானகரம், குளிர்பானம் போன்றவற்றை வழங்கினர். பல்வேறு இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை, மஞ்சள் நீராட்டு 

11–ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவ மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். அங்கு இரவில் சுவாமி–அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி–அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் சுவாமி–அம்பாள் மேலக் கோவில் சேர்கிறார்கள்.

12–ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி–அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன், எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி–அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story