முழு அடைப்புக்கு ஆதரவாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் நாளை மூடல் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு


முழு அடைப்புக்கு ஆதரவாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் நாளை மூடல் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2018 2:30 AM IST (Updated: 8 Sept 2018 8:15 PM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கோவில்பட்டி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

விலை உயர்வு

கோவில்பட்டியில் நே‌ஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பகுதி எந்திர தீப்பெட்டி உற்பத்திக்கும், முழு எந்திர தீப்பெட்டி உற்பத்திக்கும் ஒரே விதமான சரக்கு, சேவை வரி விதிக்கப்படுகிறது. இதனால் பகுதி எந்திர தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மெழுகு, ஈரான் நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் ரூ.61–க்கு விற்ற ஒரு கிலோ மெழுகு தற்போது ரூ.73 ஆகவும், ரூ.62–க்கு விற்ற ஒரு கிலோ குளோரைட் ரூ.68 ஆகவும், ரூ.40–க்கு விற்ற ஒரு கிலோ அட்டை தற்போது ரூ.45 ஆகவும், ரூ.42–க்கு விற்ற ஒரு கிலோ தீக்குச்சி தயாரிக்க தேவையான மரக்கட்டை தற்போது ரூ.45 ஆகவும் விலை உயர்ந்து விட்டது. இதனால் தீப்பெட்டி உற்பத்திக்கு செலவு அதிகரித்து உள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்

முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளால் பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கடம்பூர் பகுதிகளில் முழுவதும் கைகளால் தீப்பெட்டி தயாரிக்கும் 800 தொழிற்சாலைகளும், 120 பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story