தொழிலாளர்களின் மீது கோடிக்கணக்கில் வங்கிக்கடன் பெற்று மோசடி: விருதுநகர் பருப்பு மில் அதிபர்களின் வீடுகளுக்கு ‘சீல்’


தொழிலாளர்களின் மீது கோடிக்கணக்கில் வங்கிக்கடன் பெற்று மோசடி: விருதுநகர் பருப்பு மில் அதிபர்களின் வீடுகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 9 Sept 2018 5:00 AM IST (Updated: 8 Sept 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

கூலித்தொழிலாளர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த விருதுநகர் பருப்பு மில் அதிபர்களின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ‘சீல்‘ வைத்தனர்.

விருதுநகர்,

விருதுநகரை சேர்ந்த பருப்பு மில் அதிபர்கள் ஓ.எம்.எஸ். வேல்முருகன் (வயது 65). செண்பகம் (55). இவர்கள் இருவரும் அவர்களது மில்லில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்து தருவதாக கூறி ஏமாற்றி ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த ஆவணங்கள் மூலம் தொழிலாளர்களின் பெயரில் தேனி மற்றும் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு வங்கிகளில் கோடிக்கணக்கில் விளைபொருள் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

வங்கிகளில் இருந்து கடன் பட்டியலில் உள்ள தொழிலாளர்களுக்கு கடனை செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததன் பேரில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பல தடைகளை தாண்டி தேனி மாவட்டம் தென்கரை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகம், அவர்களது மில்லில் கணக்கராக இருந்த கலைச்செல்வி, இடைத்தரகர்கள் சோலைராஜ், சன்னாசி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் செண்பகத்தின் மகள் இந்துமதி, மருமகன் விமல்குமார் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கோவையில் ஆடிட்டர்களாக உள்ளனர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக சில வங்கி அதிகாரிகள் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத வங்கி அதிகாரிகள் 3 பேர் முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மோசடியில் சிக்கி ஏமாந்தது தொடர்பாக இதுவரை 150 புகார்கள் தென்கரை போலீசாருக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று சென்னை அமலாக்க பிரிவு கூடுதல் இயக்குனர் நர்மதா தலைமையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் விருதுநகர் வந்தனர். அவர்கள் விருதுநகர் பருப்பு மில்லில் கணக்கராக வேலை செய்து கைதான கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு கலைச்செல்வியின் தாயார் நாகரத்தினம்மாளும், மகன் விக்னேசும் இருந்தனர். அவர்களிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறைகளை சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்த போது அதற்கான சாவி இல்லை என தெரிவிக்கப்பட்டதால் பூட்டை உடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த அறைகளை விக்னேஷ் திறந்து விட்டார். அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மற்றொரு பிரிவாக கமலம் பச்சையப்பன் தெருவில் உள்ள பருப்பு மில் அதிபர் ஓ.எம்.எஸ். வேல்முருகன் வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. எனவே அவர்களது சகோதரர் ஓ.எம்.எஸ். ஜெகநாதன் முன்னிலையில் வீட்டிற்கு ‘சீல்‘ வைத்தனர்.

மேலும் இந்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி ஒரு நோட்டீசையும் ஒட்டினர். இதே போன்று வையாபுரி நந்தவனம் தெருவில் உள்ள மற்றொரு மில் அதிபர் செண்பகத்தின் வீட்டிற்கும், பி.சி.கே. பெரியகருப்பன் தெருவில் உள்ள செண்பகத்தின் தாயார் சீதாலெட்சுமி வீட்டிற்கும் அமலாக்கப்பிரிவினர் ‘சீல்‘ வைத்தனர்.

மேலும் கலைச்செல்வி வீட்டில் வைத்து ஓ.எம்.எஸ். பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகத்தின் உறவினர்களிடமும், கலைச்செல்வியின் தாயார் நாகரத்தினம்மாள் மகன் விக்னேசிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவில் நீண்ட நேரம் வரை நீடித்தது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அமலாக்கப்பிரிவினரின் நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது.

அமலாக்கப்பிரிவினரின் வருகையை யொட்டி அவர்கள் சோதனை நடத்திய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமலாக்கப்பிரிவினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் விருதுநகரில் பரபரப்பு நிலவியது.

சர்ச்சையில் சிக்கிய பருப்பு மில்லின் மொத்த விற்பனை நிலையம் மதுரையில் தளவாய் தெருவில் செயல்பட்டு வந்தது. அந்த விற்பனை நிலையத்திலும் அமலாக்கத்துறையினர் நேற்று மதியம் முதல் சோதனை நடத்தினர். பின்னர் அவர்கள் விற்பனை நிலையத்தை சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, “விருதுநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பருப்பு மில் நிறுவனமானது காபி, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் போலி ஆவணங்களை காட்டி 90 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. அதன் பேரில் சி.பி.ஐ. விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத்துறையினர் விருதுநகர், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்“ என்றனர்.


Next Story