சிவகங்கை மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,590 வழக்குகளுக்கு தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,590 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பெயரிலும் சிவகங்கை மாவட்டத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தில் 12 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி செந்தூர்பாண்டியன், கூடுதல் நீதிபதி தணியரசு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராதிகா, சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளருமான வடிவேலு, சார்பு நீதிபதி செல்வகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் லலிதாராணி ஆகியோர் சிவகங்கை நகரிலுள்ள வழக்குகளை விசாரித்தனர். அவர்களுடன் வக்கீல்கள் செங்கோல், முருகன், கண்ணன், முத்துபாண்டியன், சரவணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர்.
இந்த முகாமில் 1,563 குற்ற வழக்குகளும், 45 செக் மோசடி வழக்குகளும், 67 வங்கி கடன் வழக்குகளும், 149 வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், 30 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 84 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 1,938 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,590 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.93 லட்சத்து 90 ஆயிரம் 699 வரையில் வழக்காளிகளுக்கு கிடைத்தது.
இதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 390 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 37 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.15 லட்சத்து 91 ஆயிரத்து 253 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் நிர்வாக அதிகாரிகள் மணிமேகலை, பானுமதி மற்றும் சட்டப்பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.