குட்கா ஊழல் விவகாரம்: ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பதில்
குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் என் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
குட்கா ஊழல் புகார் தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று முன்தினம் தனது வீட்டில் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் துணை கமிஷனராக இருந்த ஜெயக்குமார் (தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
அவர் பணியில் இருந்தபோது குட்கா ஊழல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்தன. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஊழல் தொடர்பான தகவல்களை என்னிடம் அவர் தரவில்லை என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. உழைப்பது என் கடமை என்றாலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.
என் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் குற்றம் சுமத்தியிருப்பது எள்ளளவும் உண்மை இல்லை. எனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. என் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துகின்றார்.
சென்னையில் நான் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பதவி வகித்தபோது மாதவரம் பகுதியில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அறிந்த உதவி கமிஷனர் மன்னர்மன்னன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொள்ள உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டேன். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த சில தொழிலாளர்களை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றனர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து அதே நாளில் மாதவரம் பகுதியில் 1½ டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குடோனில் ஆய்வு செய்த ½ மணி நேரம் மட்டும்தான் என்னுடைய வேலை. மற்ற எதுவும் எனக்கு தெரியாது. அசைன்மெண்ட் என்றால்தான் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திடீர் சோதனை என்பதால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கொள்வார். இதுதான் நடைமுறை.
தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது. இல்லையென்றால் நேர்மையான பல அதிகாரிகளை கைது செய்து வழக்கை முடித்து இருப்பார்கள்.
இந்த ஊழல் புகாரில் ஜார்ஜ், தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து மற்ற அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தக்கூடாது.
அவர் பழிவாங்கும் நோக்கத்தில் என் மீது தவறான அவதூறுகளை பரப்பி வருகிறார். என் மீது சுமத்தப்படும் குற்றம் முற்றிலும் தவறானது. இதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன். சி.பி.ஐ. விசாரணையின் முடிவில் உண்மை குற்றவாளி யார் என்பது விரைவில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– உங்களை திறமையில்லாத அதிகாரி என்று ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்:– எனது பணி குறித்து தற்போதுள்ள விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு முன் என்னுடைய நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர். நான் திறமையில்லாத அதிகாரி என்றால் அப்போதே என்னை இடமாற்றம் செய்திருக்க வேண்டியதுதானே?
கேள்வி:– தற்போது ஜார்ஜ் திடீரென உங்கள் மீது குற்றம் சுமத்த காரணம் என்ன?
பதில்:– அரசியல்வாதிகள்கூட காரணமாக இருக்கலாம். அவர்கள் தப்பிக்க அதிகாரிகளை சிக்கவைக்க பார்க்கிறார்கள்.
கேள்வி:– குட்கா ஊழல் நடந்தபோது நீங்கள்தானே விசாரணை அதிகாரியாக இருந்தீர்கள்.
பதில்:– நான் விசாரணை அதிகாரி கிடையாது. எங்கள் குழுவினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நாங்கள் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தி பறிமுதல் செய்து அவற்றை அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மற்றொரு பணிக்காக சென்று விட்டோம். அதோடு எங்கள் பணி முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:–
சென்னை போலீஸ் கமிஷனராக அவர் (ஜார்ஜ்) இருந்தபோது, அவருக்கு கீழ் 4 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அப்போது நான் எப்படி பணியாற்றினேன் என்பது போலீஸ்துறையை சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றாக தெரியும்.
நான் கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்தேன். உழைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான பரிசு தான் அவருடைய குற்றச்சாட்டு என்று நினைக்க தோன்றுகிறது. என் மீதான குற்றச்சாட்டை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நான் பதவியில் இருக்கிறேன். எனவே அவரை போன்று என்னால் பேச முடியாது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.