கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 8:16 PM GMT)

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் லாரன்ஸ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சுரங்கப்பாதை வழியாக ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தும், மாற்றுப்பாதை வழியாக சென்று வருவது குறித்தும் முக்கிய சந்திப்புகளில் விளம்பர பதாகைகளை போக்குவரத்து போலீசார் வைத்திருந்தனர்.

அதன்படி திருவந்திபுரம் மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற கனரக வாகனங்கள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம், நத்தவெளிசாலை, சரவணாநகர், வண்டிப்பாளையம் சாலை, ரெயில்வே மேம்பாலம், கடலூர்–சிதம்பரம்சாலை வழியாக கடலூருக்கு வந்து செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு ஷேர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் அபேசிட்டி ஆட்டோ ஓட்டுனர் நலசங்க தலைவர் தண்டாமுரளி தலைமையில் ஷேர் அட்டோ டிரைவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரணீதரன் ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் போலீஸ் நிலைய வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.

பின்னர் ஆட்டோ சங்க தலைவர் தண்டாமுரளி நிருபர்களிடம் கூறுகையில், இன்று முதல் சுரங்கப்பாதை வழியாக சென்றுவர எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாறாக மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், நத்தவெளி சாலை, சரவணாநகர் இணைப்பு சாலை, ரெயில்வே மேம்பாலம் வழியாக பஸ்நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது டீசல் விலையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிற நிலையில் இந்த மாற்றுப்பாதை வழியாக சென்று வருவது என்பது எங்களுக்கு கட்டுப்படியாகாது.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு திருவந்திபுரத்தில் இருந்து கடலூருக்கு வரும்போது மாற்றுப்பாதை வழியாக வருகிறோம். ஆனால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்துக்கு செல்லும்போது மட்டுமாவது சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதியுங்கள் என்றோம். ஆனால் அதற்கும் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து கலெக்டரை சந்தித்து எங்களுடைய ஆட்டோக்கள், ரே‌ஷன்கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறினார்.


Next Story