ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற திட்டம்: பீர்க்கன்காரணை ஏரி ரூ.10 கோடியில் சீரமைப்பு


ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற திட்டம்: பீர்க்கன்காரணை ஏரி ரூ.10 கோடியில் சீரமைப்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:15 PM GMT (Updated: 2018-09-09T01:56:40+05:30)

பீர்க்கன்காரணை ஏரியை ரூ.9 கோடியே 81 லட்சம் செலவில் சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பகுதி வாரியாக கணக்கெடுத்து, படிப்படியாக அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையம் பகுதியில் பீர்க்கன்காரணை ஏரி உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி, தற்போது 20 ஏக்கராக சுருங்கிவிட்டது.

கடந்த காலங்களில் தாம்பரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பீர்க்கன்காரணை ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீரே முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியில் வண்டலூர் மலைப்பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ளநீரே முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது. கடல்போல காட்சியளித்த இந்த ஏரி, ஆக்கிரமிப்பாளர்களால் மழைநீரை தேக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது கழிவுநீர் மட்டுமே உள்ள ஏரியாக உள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளில் முக்கிய நீர்ஆதார ஏரியாக உள்ள பீர்க்கன்காரணை ஏரியை பாதுகாக்க வேண்டும் என நீண்டநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் ஏரியாக இதை மாற்ற பொதுப்பணித்துறையினர் திட்டம்தீட்டி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த ஏரியை சீரமைத்து தமிழகத்தின் முன்மாதிரி ஏரியாக மாற்ற காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கியது. தற்போது ஏரியை சீரமைக்க ரூ.9 கோடியே 81 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு, பொதுப்பணித்துறையால் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்த ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ அந்த அளவுக்கு ஏரியின் அளவுகள் கணக்கெடுக்கப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கைகளையும் வருவாய்த்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பகுதி வாரியாக கணக்கெடுத்து, படிப்படியாக அகற்றவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஏரியை ஆக்கிரமித்து 2 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. சில இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டா வாங்கி உள்ளனர். பட்டா இல்லாத இடங்களை தற்போது வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து ஏரி சீரமைப்பு பணிக்கு ஏற்றார்போல முதல் கட்டமாக 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடிவு செய்து உள்ளனர்.

ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்கப்்பட உள்ளது. முதல் கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ள இடங்களில் வருவாய்த்துறையினர் குறியீடு செய்துள்ளனர்.

இந்த இடங்களில் முதல்கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிந்த பிறகு ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.

ஏரியில் 4 இடங்களில் நீர் உள்வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேமிக்கவும், கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏரியின் நீர் வரத்துக்கு ஏற்பவும், கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் உபரிநீரை சீரான முறையில் வெளியேற்றவும் ஏரியின் கிழக்குப்பகுதியில் மதகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏரியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும், ஏரிக்கரைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபயிற்சி தளமும் அமைக்கப்பட உள்ளது. ஏரி முக்கிய ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் உள்ளதால் ஏரிக்கரை பகுதியில் அழகிய பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் முன்மாதிரி ஏரியாக மாற்றப்பட உள்ள பீர்க்கன்காரணை ஏரி எதிர்காலத்தில் சென்னையின் முக்கிய நீர்ஆதார ஏரியாக மாறும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு பணிகள் தொடங்க உள்ளது.

ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக செய்து முடிக்க வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறையினரும் மழை காலத்துக்கு முன்பே ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story