மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 8:40 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், ஜூலை 19-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவில் பெய்த கனமழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி, காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதத்தில் பெய்த பருவமழை முழுமையாக நின்று விட்டது. இதனால் அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பகலில் வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனிடையே டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து உள்ள நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது.

Next Story