நாளை முழு அடைப்பு போராட்டம்: வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


நாளை முழு அடைப்பு போராட்டம்: வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Sept 2018 4:45 AM IST (Updated: 9 Sept 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சேலத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் வரவேற்றார். தி.மு.க.வை சேர்ந்த மத்திய மாவட்ட அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன் முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகி அன்சர்பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலுநாயக்கன், எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் அப்சர் அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, மெடிக்கல் பிரபு, மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி சாரதாதேவி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுகிற வகையில் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல் பொருட்களின் விலையை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் அதற்கு வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளித்து போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ், தி.மு.க .உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story