பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கம்


பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:30 PM GMT (Updated: 2018-09-09T03:01:34+05:30)

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்போம் என்ற திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் கந்தசாமி, வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கூட்டுறவு வங்கி இயக்குனர் பெருமாள் நகர் கே.ராஜன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதாஅருணாச்சலம், வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக சென்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் நிறைவடைந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா சமுதாய கூடத்தில் திருவண்ணாமலை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் தயாரித்திட அளிக்கப்படும் பயிற்சி முகாமினை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

வந்தவாசி

வந்தவாசி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி மேலாளர் என்.ராமலிங்கம், துப்புரவு ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம், உதவியாளர் சிவா, ரோட்டரி சங்கத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் பழைய பஸ்நிலையம், பஜார், தேரடி, காந்திசாலை வழியாக பழைய பஸ்நிலையத்தை அடைந்து முடிவுற்றது.

ஆரணி

ஆரணி நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலுவலக மேலாளர் நெடுமாறன், உதவி பொறியாளர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வழியாக சென்றனர். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் முன் வந்து நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் நகராட்சி களப் பணியாளர்கள், நகராட்சி சித்த மருத்துவர் டாக்டர் சங்கரீஸ்வரி, ஆசிரியர்கள் குமரன், பூங்கொடி, செல்வி, மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் மேற்கு ஆரணி ஒன்றியம், காமக்கூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே மாதிரி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது குறித்து சிறப்பு கிராமசபை கூட்டமும் நடைபெற்றது. முடிவில் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

வேட்டவலம்

வேட்டவலத்தில் நடந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சி இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் வேட்டவலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பிளாஸ்டிக் தீமைகள் குறித்த வாசகங்களை முழங்கிய வாறு சென்றனர். வேட்டவலம் பஸ் நிலையத்தில் தொடங்கி மாடவீதி வழியாக சென்றனர்.

இதில் பேரூராட்சி வரித்தண்டலர் பூபாலன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன், சந்திரமோகன், முருகன், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை செயல் அலுவலர் கோபிநாதன் தொடங்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் பெரணமல்லூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரம் வழங்கினர்.

அதேபோல் சேத்துப்பட்டு பேரூராட்சி சார்பில் நடந்த ஊர்வலத்தை பேரூராட்சி இளநிலை உதவியாளர் சங்கர் தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகளை எடுத்து சென்றனர். துப்புரவு மேற்பார்வையாளர் ஆஷாமேரி, மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தனர். தேசூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் இளநிலை உதவியாளர் ரமேஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுப்பாளையம்

புதுப்பாளையம் பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சுகந்தி தொடங்கி வைத்தார். இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வீரானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் வீரமணி தலைமையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கண்ணமங்கலம் நாட்டு நலப்பணி த்திட்ட அலுவலர் ரவி, உதவி ஆசிரியர் பழனி, உடற்கல்வி இயக்குநர் சுரேஷ், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் கண்ணமங்கலம் முக்கிய வீதி வழியே சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது.

Next Story