தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு: நில ஆர்ஜிதம் தொடர்பான 2 வழக்குகளுக்கு ரூ.98½ லட்சம் இழப்பீடு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு: நில ஆர்ஜிதம் தொடர்பான 2 வழக்குகளுக்கு ரூ.98½ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 8 Sep 2018 10:45 PM GMT (Updated: 8 Sep 2018 9:45 PM GMT)

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் நில ஆர்ஜிதம் தொடர்பான 2 வழக்குகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு ரூ. 98 லட்சத்து 50 ஆயிரத்து 514-ஐ இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கினர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் வேலூர் உள்பட 11 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான (பொறுப்பு) வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். குடும்ப நல நீதிபதி லதா, தொழிலாளர் நீதிபதி செல்வசுந்தரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தாமோதரன், கூடுதல் சார்பு நீதிபதி ராஜசிம்மவர்மன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி வெற்றிச்செல்வி பேசுகையில், இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் போன்ற பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 278 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ.16 கோடியே 86 லட்சத்து 95 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது, என்றார்.

நிகழ்ச்சியில் நில ஆர்ஜிதம் தொடர்பாக 2 வழக்குகளுக்கு ரூ.98 லட்சத்து 50 ஆயிரத்து 514-ஐ இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு, நிலம் வழங்கியவர்களுக்கு அதற்கான காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர்.

அந்த இரு வழக்குகள் விவரம் வருமாறு:-

வாணியம்பாடி தாலுகா சாணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 81). இவருக்கு சொந்தமான நிலத்தை 1994-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்தியது. அதற்காக அப்போது ரூ.52 ஆயிரம் வழங்கியது. தட்சிணாமூர்த்தி கூடுதல் தொகை கேட்டு வேலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவருக்கு 2015-ம் ஆண்டு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனக் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் அதே கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், தட்சிணாமூர்த்திக்கு ரூ.45 லட்சத்து 11 ஆயிரத்து 216-ஐ வழங்க உத்தரவிட்டனர்.

இதேபோல வாணியம்பாடி தாலுகா சாணாங்குப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் நிலமும் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட தொகை போதாது என அவர் வேலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் கூடுதலாக இழப்பீடு தொகை கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்தினர் அந்த வழக்கை நடத்தினர்.

2015-ம் ஆண்டு ரூ.53 லட்சத்து 39 ஆயிரத்து 298-ஐ வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் சீனிவாசனின் குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று மக்கள் நீதிமன்றத்தில் சீனிவாசனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி பாரி, மாஜிஸ்திரேட்டுகள் அலிஷியா, வெற்றிமணி, கனகராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமி, அரசு கூடுதல் வக்கீல் உமாசங்கர் (நில ஆர்ஜிதம்), சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சதீஷ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story