நிலச்சரிவின் போது அவசரகால உதவிகள் புரிய நீலகிரியில் 2 ஆயிரத்து 529 மீட்பு
நிலச்சரிவின் போது அவசரகால உதவிகள் புரிய நீலகிரியில் 2 ஆயிரத்து 529 மீட்பு பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
ஊட்டி,
ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், ஆர்.டி.ஓ.க்கள் சுரேஷ், முருகையன், பத்ரிநாத், தாசில்தார்கள் தினேஷ், ராம்குமார் (கட்டுப்பாட்டு அறை), தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடாக மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகளுக்கும் 35 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 24 மணி நேரமும் அப்பகுதிகள் கண்காணிக்கப்படும். மழை பாதிப்பு ஏற்படும் போது, 456 பள்ளி மற்றும் பாதுகாப்பு நிவாரண மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கும்.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் குளம், குட்டை மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் போதிய அளவு அத்தியாவசிய உணவு பொருட்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான மருத்துவ உபகரணங்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் அவசரகால உதவிகள், முதலுதவிகள் செய்வதற்கு 2 ஆயிரத்து 529 மீட்பு பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளளர்.
பலத்த மழை, இயற்கை இடர்பாடுகளின் போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் இயற்கை இன்னல் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற தொலைபேசி எண்ணில் இலவசமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதேபோன்று ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் 0423–2445577, குன்னூர் ஆர்.டி.ஓ. 0423–2206002, கூடலூர் ஆர்.டி.ஓ. 04262–261295, ஊட்டி தாசில்தார் 0423–2442433, குன்னூர் தாசில்தார் 0423–2206102, கோத்தகிரி தாசில்தார் 04266–271718, குந்தா தாசில்தார் 0423–2508123, கூடலூர் தாசில்தார் 04262–261252, பந்தலூர் தாசில்தார் 04262–220734 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு இடர்பாடுகள் குறித்து தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.