குடிநீர் திருட்டை தடுக்க தவறிய ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை


குடிநீர் திருட்டை தடுக்க தவறிய ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Sept 2018 4:11 AM IST (Updated: 9 Sept 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திருட்டை தடுக்க தவறிய ஊராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள 2–வது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் தற்போது குடிநீர் வினியோகம் செய்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சாணார்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் சில கிராமங்களுக்கு குடிநீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின்பேரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சாணார்பட்டி பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து முறைகேடாக இணைப்பு கொடுத்து குடிநீர் திருடப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் எதிரொலியாக குடிநீர் திருட்டை தடுக்க தவறிய, சாணார்பட்டி ஊராட்சி மின்மோட்டார் இயக்குபவர் மாரியப்பன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாரியப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் சாணார்பட்டி ஊராட்சி செயலாளரிடம் விளக்கம் பெற்று மேல்நடவடிக்கை எடுக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து குடிநீர் திருடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.


Next Story