திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதையில் 3 மொழிகளில் மிளிரும் திருக்குறள்


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதையில் 3 மொழிகளில் மிளிரும் திருக்குறள்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 10:42 PM GMT)

திண்டுக்கல் ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் 3 மொழிகளில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 70–க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதன் மூலம் 7 ஆயிரத்துக்கும் அதிகமாக பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து 3–வது நடைமேடைக்கு செல்வதற்கு ஏற்கனவே சுரங்கப்பாதை வசதி உள்ளது.

இதற்கிடையே முதலாவது நடைமேடையில் இருந்து 6–வது நடைமேடை வரை நடைமேடை பாலம் நீட்டிக்கப்பட்டது. மேலும் நடைமேடை பாலத்துக்கு எளிதாக செல்லும் வகையில் 3 லிப்டுகளும் அமைக்கப்பட்டன. இதனால் சுரங்கப்பாதை வழியாக சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி சுரங்கப்பாதையை சிலர் அசுத்தமாக்கினர்.

இதை தவிர்க்கும் வகையில் சுரங்கப்பாதை நுழைவாயிலில் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை ஆகியவற்றின் ஓவியம் வரையப்பட்டது. அதேநேரம் சுரங்கப்பாதை சுவர்களில் விளம்பரம் செய்வதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் சுரங்கப்பாதையின் இருபக்க சுவர்களிலும் காலியாக உள்ள இடத்தில் உலக பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 11 குறள்களுடன், சுரங்கப்பாதை அழகாக மிளிர்கிறது. சுரங்கப்பாதைக்குள் நுழைந்ததும் முதலில் குறள் தெரியும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டு இருப்பது மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும். இதேபோல் ஒவ்வொரு திருக்குறளின் அருகிலும் அதன் வரிசை எண் குறிப்பிட்டுள்ளனர். இது ரெயில் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story