திருப்பூர் மாநகரில் வாடகைக்கு வீடு கொடுப்பதில் கெடுபிடி: நகரை விட்டு விலகிச்செல்லும் தொழிலாளர்கள்


திருப்பூர் மாநகரில் வாடகைக்கு வீடு கொடுப்பதில் கெடுபிடி: நகரை விட்டு விலகிச்செல்லும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 9 Sept 2018 4:19 AM IST (Updated: 9 Sept 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் சமீப காலமாக வாடகைக்கு வீடு கொடுக்க வீட்டின் உரிமையாளர்கள் கெடுபிடி செய்வதால், தொழிலாளர்கள் நகரை விட்டு விலகி புறநகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.

வீரபாண்டி,

‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை தொழிலை சார்ந்தும், வியாபாரம் சார்ந்தும் திருப்பூரில் பல லட்சம் பேர் தங்கி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தனியாக வரும் தொழிலாளர்கள், நாளடைவில் குடும்பத்துடன் இங்கேயே குடியிருக்க விரும்புகின்றனர்.

பின்னலாடை தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாகவும், கீழ்த்தட்டு குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலரும் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் திருப்பூரில் குடியிருப்பு பகுதி அதிகரித்துள்ளது. அதேநேரம் வாடகைக்கு வீடு கொடுக்கும் வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனைகளும், கெடுபிடிகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனால் வாடகை வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பலரும் திக்குமுக்காடிவருகிறார்கள். குறிப்பாக திருப்பூரில் பெரும்பாலான வாடகை வீடுகள் ‘லைன்’ வீடுகளாக உள்ளன. ஒரு குடும்பம் தங்குவதற்கு ஏற்ப ஒரு அறை, ஒரு படுக்கை அறை, சமையல் அறை மற்றும் உள்ளடங்கிய குளியல் அறை மற்றும் கழிவறை வசதியுடன் வீடுகள் வாடகைக்கு உள்ளன. அல்லது இரண்டு, மூன்று குடும்பங்களுக்கு ஒரே குளியல்அறை மற்றும் கழிவறை இருக்கின்றன.

இப்படிப்பட்ட வீடுகளுக்கான வாடகை குடியிருக்கும் பகுதியை பொருத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையும், முன்பணமாக 10 மாத வாடகையையும் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வாடகை விடப்படும் வீடுகளுக்கு அதன் உரிமையாளர்கள் தனித்தனியாக மின்இணைப்பு வாங்குவது கிடையாது. குறிப்பாக பல இடங்களில் 2 முதல் 5 வீடுகளுக்கு ஒரு மின் இணைப்பு தான் உள்ளன. இதனால், வீட்டு வாடகையுடன், மின்கட்டணமாக குறிப்பிட்ட யூனிட்டுக்கு மேல் ரூ.5 என நிர்ணயித்து வீட்டு உரிமையாளர்களே வசூலித்து கொள்வார்கள்.

மேலும் தண்ணீர் பயன்படுத்துவதற்கு, மோட்டார் பயன்படுத்துவதற்கு, அந்த குடியிருப்பின் பொது இடத்தை சுத்தம் செய்வதற்கு, வாசல் தெளித்து, கோலம் போட என்று எப்படியெல்லாம் கட்டணம் வசூல் செய்யமுடியுமோ அப்படியெல்லாம் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூல் செய்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சில வீட்டு உரிமையாளர்கள் 6 முதல் 8 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு வாடகையை திடீரென உயர்த்துவது, திருமணமாகாத வாலிபர்களுக்கு வீடு தர மறுப்பது, இரவு 10 மணிக்கு மேல் வாசல் கதவை பூட்டுவது, இரவு டி.வி. இயக்கவோ, மின் விளக்கு எரியவோ அனுமதி மறுப்பது, இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு என்று ஏராளமான நிபந்தனைகளை கூறி கெடுபிடிகள் விதிப்பதால் வாடகை வீடு தேடும் பலரும் பரிதவித்து வருகின்றனர்.

திருப்பூரில் புரோக்கர்கள் சிலர் வீடு வாடகைக்கு பார்த்து கொடுத்து தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகள் புரோக்கர்கள் மூலமாக பார்த்து குடியேறுகின்றனர். வாடகைக்கு வீடு பார்த்து கொடுக்கும் புரோக்கர்களுக்கு ஒரு மாத வாடகை கமி‌ஷனாக கொடுக்கவேண்டும். வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருவதால், குறைந்த வசதிகள், அதிக வாடகை என்றாலும், வேறு வழியின்றி சம்மதிக்க வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நகரை விட்டு 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் வீடு வாடகைக்கு பார்த்து குடியேறும் நிலமை ஏற்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வாடகை வீடு ரூ.2 ஆயிரம் முதல், ரூ.3 ஆயிரம் வரை கிடைப்பதால் பல தொழிலாளர் குடும்பத்துடன் புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனால் புறநகர் பகுதிகளில் வாடகை வீடுகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.


Next Story