பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது


பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 Sep 2018 11:14 PM GMT (Updated: 8 Sep 2018 11:14 PM GMT)

பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வருகிற 13-ந் தேதி தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

மும்பை,

மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா (மவுண்ட் மேரி) ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 8 நாட்களுக்கு ஆலய திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மலை மாதா ஆலய திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை முதலே கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு பெருந்திரளாக குவிய தொடங்கினர். அவர்கள் மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

மலை மாதா ஆலய திருவிழா நாட்களில் கொங்கனி, மராத்தி, குஜராத்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில், வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்வார்கள்.

திருவிழாவையொட்டி பாந்திராவில் மாதா ஆலயத்தையொட்டிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சில சாலைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி பாந்திரா மலை மாதா கோவில் மற்றும் அதை சுற்றிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story