முக்கொம்பு அணையை முற்றுகையிட சென்ற 370 விவசாயிகள், தஞ்சையில் கைது


முக்கொம்பு அணையை முற்றுகையிட சென்ற 370 விவசாயிகள், தஞ்சையில் கைது
x
தினத்தந்தி 8 Sep 2018 11:35 PM GMT (Updated: 2018-09-09T05:05:15+05:30)

முக்கொம்பு அணையை முற்றுகையிட சென்ற விவசாயிகள் 370 பேர் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

வெள்ளத்தால் உடைந்த முக்கொம்பு மேலணையில் ராணுவம் மூலம் தற்காலிக கதவணை அமைத்து காவிரி பாசனத்துக்கு தண்ணீரை உடனடியாக விடுவிக்கக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் முக்கொம்பு மேலணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மன்னார்குடியில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு முக்கொம்பு நோக்கி சென்றனர். இதில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொருளாளர் ரெங்கசாமி, விவசாய சங்க தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகளும் சென்றனர்.

இவர்கள் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை என்ற இடத்தில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு நின்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முருகேசன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்வதாக தெரிவித்தனர்.

அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து கைது செய்தனர். இதில் பி.ஆர்.பாண்டியன், ரெங்கசாமி உள்பட 370 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரையும் மாரியம்மன் கோவிலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து வேறு மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், தங்களை போலீசார் அலைக்கழிப்பதாக கூறி தஞ்சை-நாகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இது குறித்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடகம் தண்ணீர் தராமல் தமிழகத்தை ஏமாற்றி விட்டது. இந்த ஆண்டு வெள்ளம் வந்தும் வயல்வெளிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. முக்கொம்பு அணை உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. உடைந்ததை பாறாங்கற்களை கொண்டு வந்தும், மணல் மூட்டைகளை கொண்டும் அடைக்கிறார்கள். இது பேரழிவை ஏற்படுத்தும். சிறு வெள்ளத்துக்கே இது தாங்காது. கல்லணைக்கு பேராபத்தை ஏற்படுத்தும். உடைந்த அணையை கற்கள் கொண்டும், மணல் மூட்டைகளை கொண்டு அடைப்பது பொறியியல் காரணங்களுக்கு முரணானது. முட்டாள்தனமானது. இனி பாசனத்துக்கு தண்ணீர் வராது.

உடைந்த அணையை ராணுவத்தை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து 3 ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க அவகாசம் உள்ளது. இதை செய்வதற்கு அரசு தயக்கம் காட்டுவது ஏன்?. முக்கொம்பு போன்று பல அணைகள் உடையும் பேராபத்தில் உள்ளது. தற்போது அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்படுவது அரசு கஜானாவை காலி செய்வதற்குத்தான். இதுகுறித்து பணியில் உள்ள நீதிபதியை கொண்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story