நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி மிளகால் மிளிரும் புதுக்கோட்டை விவசாயி
கேரளாவிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலும் தான் மிளகு விளையும். சமவெளி பகுதிகளில் மிளகு விளையாது என எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
கேரளாவிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலும் தான் மிளகு விளையும். சமவெளி பகுதிகளில் மிளகு விளையாது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சற்று வறட்சியான மாவட்டமாக கருதப்படும் புதுக்கோட்டையில் உள்ள தனது தோட்டத்தில் 18 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து அதில் அதிக மகசூல் எடுத்து வருகிறார் இயற்கை விவசாயி ராஜாகண்ணு.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ளது அவரது தோட்டம். அங்கு ஈஷா விவசாய இயக்கம் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த நேரடி களப் பயிற்சிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 விவசாயிகள் வந்திருந்தினர்.
ராஜாகண்ணுவின் தோட்டத்தை சுற்றி பார்த்தபோது பச்சை பசேலென்ற காட்டுக்குள் இருப்பது போல் தோன்றியது. தரையை பார்த்தாலும் மேலே பார்த்தாலும் பச்சையாக இருந்தது. சுற்றிலும் தென்னை மரங்கள் அவற்றின் நடுவே ஊடுபயிர்களாக செம்மரம், சில்வர் வோக், மகோகனி போன்ற பணப் பயிர் மரங்கள். இடையிடையே வாத நாராயணன், கிளுவை, கிளைரிசிடியா போன்ற மரங்களை நட்டிருந்தார். எல்லா மரங்களிலும் மிளகு கொடி படர்ந்து இருந்தது. அறுவடை காலம் என்பதால் கொடிகளில் மிளகு கொத்து கொத்தாக காய்த்து இருந்தது.
அதில் ஒன்றை பறித்துக் காட்டி “இது கரிமுண்டா ரகம். 10 ஏக்கர் தென்னந்தோப்புல 4 ஏக்கர்ல மிளகு போட்டிருக்கேன். அதுல 75 சதவீதம் கரிமுண்டா ரகம் தான். இது வருசா வருசம் நல்ல காய்ப்பு கொடுக்கும். மீதி 25 சதவீதம் பன்னியூரா ரகம் போட்டிருக்கேன். மிளகு செடியை பொறுத்தவரைக்கும் நட்டதுல இருந்து ஒன்றரை வருசத்துக்குள்ள பாதிக்கு பாதி காய்ப்பு வந்துரும். 3 வருசத்துல முழுசா காய்ப்பு வந்துரும். ஆறேழு வருசம் போனால் அதிகப்படியான மகசூல் பாத்திரலாம். இப்போ நான் ஒரு ஏக்கர்ல 400-ல் இருந்து 600 கிலோ வரைக்கும் மகசூல் எடுக்குறேன். அதை மசாலா கம்ெபனிகாரங்களுக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் வித்துருவேன். ஒரு கிலோ 800 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரைக்கும் விலைபோகுது” என அவர் சொல்வதை கேட்டு ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர் இதர விவசாயிகள்.
“அடேங்கப்பா ஒரு ஏக்கருக்கு 5 லட்சம்னு வைச்சுக்கிட்டாலும் 4 ஏக்கருக்கு 20 லட்சம் ரூபாய் கெடைக்குமே” என்றார், ஒரு விவசாயி.
மற்றொரு விவசாயி “சரிதானுங்க.. ஆனால் இந்த மிளகு செடி எல்லா இடத்துலயும் வளருமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு “சமவெளியிேலயும் மிளகு விளையுங்குறது என் தோட்டத்ைத பாத்ததும் உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். மிளகு செடி வளர்றதுக்கு பாதி வெயில் பாதி நிழல் இருக்கணும். பாசன வசதியும் அவசியம். 10 செடிைய வாங்கிட்டு போயி உங்க நிலத்துல நட்டு பாருங்கா. நல்லா வளந்துச்சுனா சந்தோஷம். முடிஞ்ச அளவுக்கு மிளகு செடியை ஏத்திருங்க. குறிப்பா, என்னய மாதிரி டிம்பர் ரக மரங்கள் போட்டுருந்தீங்கனா கண்டிப்பாக மிளகு செடி ஏத்திருங்க. ஏனா, அந்த மரங்கள்ல வருமானம் பாக்கணும்னா 20, 30 வருசம் காத்திருக்கணும். ஆனா, மிளகு ஏத்துனீங்கனா அஞ்சு வருசத்துல இருந்தே வருசா வருசம் வருமானம் பாத்திருலாம்” என்றார் ராஜாகண்ணு.
“மிளகுக்கு நோய் தாக்குதல் பாதிப்பு எதுவும் இருக்குங்களா” என இளம் விவசாயி ஒருவர் கேட்ட கேள்விக்கு, “தம்பி, இதுவரைக்கும் என்னோட தோட்டத்துல எந்த நோய் தாக்குதலும் வந்தது இல்ைல. மிளகு செடியில காரத் தன்மை இருக்குறது னால பூச்சி தாக்குதல் வர்றதுக்கு வாய்ப்பு கம்மி. இயற்கை முறையில் விவசாயம் செய்தால் பெருசா எந்த பாதிப்பும் வராது. ஜீவாமிர்தம் பயன்படுத்துனாலே போதும். கெமிக்கல் உரம் போடுற நிலத்துல வேர் அழுகல் நோய் வர்றதா சொல்றாங்க. அதனால, நீங்களும் இயற்கை முறையிலயே விவசாயம் பண்ணுங்க. நல்லா வரும்” என கூறி அந்த இளம் விவசாயியின் தோளை தட்டிக்கொடுத்து நம்பிக்கையூட்டினார் முன்னோடி விவசாயி ராஜாகண்ணு.
ரசாயன உரங்கள் வரமா? சாபமா? தொடர்ந்து பார்க்கலாம்!
(இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்)
- தொடரும்.
பயிரிடும் முறை
தென்னை மரத்திலும், டிம்பர் ரக மரங்களிலும் மிளகு கொடியை ஏற்றலாம். தென்னந்தோப்புக்குள் வாதநாராயணன், கிளுவை, கிளைரிசெடியா மாதிரியான போத்து மரங்களை நட்டு அதில் மிளகு கொடியை ஏற்றினால் கூடுதல் மகசூல் பெறலாம். முருங்கை மரம் மாதிரி சீக்கிரம் உடைந்து போகிற மரங்களில் மிளகு ஏற்றக்கூடாது.
மரத்தில் இருந்து ஒன்றரை அடி தூரத்தில் ஒரு மண்வெட்டி அளவுக்கு குழி தோண்டனும். அதில் தொழு உரம் போட்டு மிளகு செடியை நட்டு நீர் பாசனம் பண்ணனும். செடி வளர வளர அதை அந்த மரத்தோட சேர்த்து சுத்திவிட்டு கட்டணும். தரையில் இருந்து 7 அடி வளர்ந்ததும் 4 அடியில் கொடியை கிள்ளி விடணும். கிள்ளிவிட்ட கொடி வளர்ந்ததும் அதை மறுபடியும் மண்ணுல இறக்கி விட்டுடனும். இப்படி பண்ணும்போது நிறைய கொடிங்க வரும். காய்ப்பும் அதிகமா கிடைக்கும். அதிகபட்சம் 12 அடி வரைக்கும் படற விடலாம். அதுக்கு மேல் போனால் காய் பறிக்குறதுக்கு சிரமமாக இருக்கும்.
15 நாளுக்கு ஒருவாட்டி ஜீவாமிர்தம் கொடுக்கணும். வாரத்துக்கு ஒருவாட்டி தண்ணீர் பாய்ச்சணும். நட்டதில் இருந்து ஒன்றரை வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமா மிளகு காய்க்க ஆரம்பித்துவிடும். அடுத்தடுத்த வருடங்களில் நல்ல மகசூல் வந்துவிடும்.
Related Tags :
Next Story