ஜொலித்த அழகிகளும்.. உயிர்பெற்ற போட்டோக்களும்..


ஜொலித்த அழகிகளும்.. உயிர்பெற்ற போட்டோக்களும்..
x
தினத்தந்தி 9 Sep 2018 8:00 AM GMT (Updated: 9 Sep 2018 8:00 AM GMT)

சர்வதேச அழகிகள் இருவரின் உடல் ஓவியம் தீட்டிய போட்டோ சரித்திர பேரழகி கிளியோபட்ராவின் அழகில் மயங்கி அவள் காலடியில் வீழ்ந்துகிடந்தான் மன்னன் ஒருவன்.

ர்வதேச அழகிகள் இருவரின் உடல் ஓவியம் தீட்டிய போட்டோ
சரித்திர பேரழகி கிளியோபட்ராவின் அழகில் மயங்கி அவள் காலடியில் வீழ்ந்துகிடந்தான் மன்னன் ஒருவன். அவனது நண்பன், போரில் எதிரிகளை பந்தாடும் மன்னனான தனது நண்பனை மயக்கிய அந்த அழகு தேவதையை பார்க்க வேண்டும் என்று விரும்பினான். மன்னனும், பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க, கிளியோபட்ராவை பார்த்த நண்பன், ‘இவளை யார் உலக பேரழகி என்று கூறியது? இவள் ஒன்றும் அவ்வளவு அற்புதமான அழகி இல்லை’ என்றான். அதற்கு அந்த மன்னன், ‘என் கண்களால் பார்த்தால்தான் அந்த பேரழகு பொக்கிஷத்தின் முழு அழகும் தெரியும்’ என்றான். அது உண்மைதான். அழகை ரசிக்க அதற்கென்று ஒரு கலைப் பார்வை வேண்டும்.

அப்படிப்பட்ட கலைப் பார்வையுடன் சென்னை காசிமேடு கடற்கரையை சுற்றிக்கொண்டிருந்தார், ஜெர்மோ போஜெனேமி. அவரோடு, அவரது மனைவியும் புகழ்பெற்ற மாடலிங் அழகியுமான மேரி அலிஜோவும் கடற்கரை மண்ணில் கால் புதைய நடந்து, காசிமேடு அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு மீனையும், கருவாட்டையும் வாங்க முண்டியடிக்கும் பொதுமக்களுக்கு மத்தியில் இந்த அமெரிக்க தம்பதிகளின் கலைப்பார்வை வித்தியாசமானதாக இருக்கிறது. அலையடிக்கும் கடலையும், அதில் முத்தமிடும் படகுகளையும், கடற்கரையில் வந்து குவியும் மீன்களையும், கட்சிக்கொடிபோன்று காய்ந்து தொங்கும் கருவாடுகளையும் பார்த்து வியந்த அவர்கள், “இயற்கையும், மனிதர்களும் இணைந்த அற்புதமான கலைக் காட்சி இது. நான் பயணித்திருக்கும் எந்த நாட்டிலும் இப்படி என் மனதை ஈர்க்கும் காட்சிகளை பார்த்ததில்லை” என்று கூறிய ஜெர்மோவின் விழிகளில் பெருமளவு வியப்பை ஏற்படுத்தியது, அந்த கடற்கரையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கலர்கலரான மீன்பிடிப் படகுகள்.

அதனை தொட்டு வருடி ரசித்த அவர், காசிமேடு படகுகளின் அத்தனை அழகையும் தனது கேமிராவுக்குள் காட்சிகளாக்க விரும்பினார். அதற்காக ஜெர்மோ எடுத்த முயற்சிகள்தான் இதில் ‘ைஹலைட்’. சர்வதேச புகழ்பெற்ற கவர்ச்சி அழகிகள் இருவரை கடற்கரைக்கு அழைத்து வந்த அவர், படகுகளில் அந்த அழகிகளை நிற்கவைத்து, உட்காரவைத்து, ஒய்யாரமாக நடக்கவைத்து எழில்கொஞ்சும் கடற்கரை காட்சிகளோடு இணைத்து விதவிதமாக படம்பிடித்துக்கொண்டிருந்தார். அந்த அழகிகள் படகில் ஏறிக்கொண்டபோது படகுக்கு கூடுதல் அழகு கிடைத்தது. கடற்கன்னிகள் படகில் ஏறி பயணித்தது போன்றிருந்தது. மக்கள் பெருமளவு கூடும் இடங்களில்தான் ட்ரோன்கள் பறந்து மேலே இருந்து படம்பிடிக்கும். இந்த படகு காட்சிகளை ஜெர்மோ ட்ரோன்கள் மூலமாகவும் படமாக்கினார்.

அவரை பற்றிய முழு விபரங்களை தெரிய விரும்பியபோது, அவர் பேச்சில் அல்ல, படம்பிடிப்பதிலே குறியாக இருந்தார். ‘கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், மறுநாள் தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வாருங்கள்’ என்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஓட்டலுக்கு சென்றோம். அங்கு ‘நவீன கால புகைப்படக்கலை கருத்தரங்கம்’ நடந்துகொண்டிருந்தது. இளைஞர்களும், இளம்பெண்களும் அதில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ‘எதிர்காலத்தில் புகைப்படக் கலை எப்படி இருக்கும்?’ என்பது பற்றி ஜெர்மோ பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கடற்கரைக்கு வந்திருந்த அந்த அழகிகளை மாடலாக வைத்து எப்படி படம்பிடிப்பது என்றும் கற்றுக்கொடுத்து க்கொண்டிருந்தார். அந்த கருத்தரங்கத்தில் இடம்பெற்றிருந்தவை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. மாணவ- மாணவிகள் போட்டிபோட்டு தங்கள் கேமிராக்களால் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இந்த ஜெர்மோ யார் தெரியுமா?

நிர்வாண கலைக்கு ‘புகழ்’ பெற்ற பிளேபாய் என்ற ஆங்கில இதழின் போட்டோகிராபர் மற்றும் இயக்குனர். உலகின் பிரபலமான அழகிகளை படம்பிடித்துக்கொண்டிருப்பவர். மற்றவர்கள் எடுக்கும் போட்டோக்களை பார்த்து அதற்கு ஒரு பின்னணி கதையை உருவாக்குபவர். ட்ரோன்கள் இன்று பெரும்பாலான நிகழ்வுகளில் படம்பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. அவைகளை பயன்படுத்தி படம்பிடிப்பதில் உலகப்புகழ் பெற்றவர். அவரோடு வந்திருந்த சர்வதேச அழகிகளில் ஒருவரான நவோமி கேப்பல் அங்கேரி நாட்டை சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு மாடலாக பணியாற்றுபவர். கலை உணர்வோடு முற்றும் திறந்த நிலையிலும் கேமிராக்களுக்கு காட்சிகொடுப்பவர். உலக அளவில் ஏராளமான கவர்ச்சி இதழ்களின் அட்டைப் படங்களில் இடம்பிடித்தவர். இவர் முதல்முறையாக சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னொருவர் ஈனா பிரெட்ரிக். இவர் குேராஷிய பேரழகி. பிளேபாய் இதழில் இடம் பெற்றவர். வெப் சீரியல் நடிகை.

புகைப்பட கருத்தரங்கம் மாலையில் நிறைவடைந்ததும், மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்த போட்டோக்களை ஜெர்மோவிடம் காட்டினார்கள். அவர் நிறைகுறைகளை கூறி மதிப்பீடு செய்து கொண்டிருந்தார். கேரளா, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த கேமிராக்களோடு வந்திருந்த இளம்பெண்களும் போட்டிபோட்டு ஜெர்மோவிடம் கேள்வி கேட்டு கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர், “என்னிடம் போட்டோகிராபி கற்றுக்கொண்ட மாணவர்களில் எல்.ராமச்சந்திரன் குறிப்பிடத்தக்கவர். உலக அளவில் நான் மூன்று பேருடைய போட்டோக்களுக்குதான் ‘ஸ்டோரி’ உருவாக்கியிருக்கிறேன். அதில் இவர் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவில் இருந்து பிளேபாய் போட்டோகிராபராக தமிழரான இவரை மட்டுமே அங்கீகரித்திருக்கிறோம். எனது மாணவரான இவர் நடத்தும் கருத்தரங்கம் மற்றும் புகைப்பட கண்காட்சியில் கலந்துகொள்ளவே சென்னைக்கு வந்திருக்கிறேன். வந்த இடத்தில் கோயம்போடு மார்க்கெட், காசிமேடு கடற்கரை போன்றவை என்னை கவர்ந்தன. இங்குள்ள பாரம்பரிய வீடுகள், ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டிகள், ரோட்டில் அலையும் பசுக்கள் எல்லாம் என் கலைக் கண்களுக்கு விருந்தளித்தன. இன்னும் சில நாட்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து நல்ல போட்டோக்களை எடுத்து, உலக அளவில் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்” என்றார்.

எல்.ராமச்சந்திரன் ஆர்ட் போட்டோகிராபி எனப்படும் கலை இணைப்புகொண்ட போட்டோக்களை உயிரோவியம் போன்று உருவாக்குபவர். அந்த அபூர்வ போட்டோக்களை கொண்டு கண்காட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் மையத்தில் இன்றும் அந்த கண்காட்சி நடக்கிறது. விஷூவல் கம்யூனிகேஷன் மற்றும் நுண்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை அங்கு பெருமளவில் காண முடிந்தது. அவர்களுக்கு போட்டோகிராபியை வகைவகையாக பிரித்து விளக்கிக்கொண்டிருந்த எல்.ராமச்சந்திரன் நம்மோடு பேசினார்!

“நவீன போட்டோகிராபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகத்தான் இந்த கருத்தரங்கை நடத்தினேன். போட்டோ கிராபியில் உலகம் வேகமாக முன்னேறிச்சென்றுகொண்டிருக்கிறது. அந்த வேகத்திற்கு தயாரானால்தான் இந்த துறையில் முன்னேற முடியும். அதனால் இந்த துறையில் சாதிக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த பயிற்சியினை வழங்கினோம். சர்வதேச புகழ்பெற்ற மாடல்களை போட்டோ எடுக்கும் வாய்ப்பு வளரும் போட்டோகிராபர்களுக்கு கிடைப்பது அரிது. அவர்களை ‘லைவ்’வாக படம்பிடித்தது, இவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

ஆர்ட் ஒர்க்குடன் இணைந்த இந்த போட்டோ கண்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஒரு போட்டோவின் கலை அலங்காரத்திற்காக ஈனா பிரெட்ரிக் 7 மணிேநரம் கால்வலிக்க நின்றிருந்தார். களிமண்ணை கலக்கி அவர் தலையில் ஊற்றி வித்தியாசமாக எடுக்கப்பட்ட போட்டோவை இத்தாலியில் புளோரன்ஸ் நகரத்தில் நடந்த கண்காட்சியில் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். அமெரிக்கா, தென்கொரியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் நான் நடத்திய கண்காட்சியிலும் அந்த போட்டோக்கள் அதிக வரவேற்பை பெற்றன. அந்த போட்ேடாவுக்கு ஜப்பானில் சில்வர் அவார்டு, இத்தாலியில் ‘டாப் போட்டோ மாஸ்டர் காண்டம்பரரி ஆப் ஆர்ட் அவார்டு’, அமெரிக்காவில் ‘ஸ்பைடர் அவார்டு’ போன்றவை கிடைத்துள்ளன. உலக அளவில் நிறைய பத்திரிகைகளிலும் அட்டைப் படத்தில் இடம்பிடித்துள்ளன. அதுபோல் சர்வதேச அழகிகள் பலரை படம்பிடித்து மக்களின் பார்வைக்காக கண்காட்சியில் வைத்திருக்கிறோம். ‘மேட்லி ஆப் ஆர்ட்’ என்ற இந்த கண்காட்சியில், உலக அளவில் சிறந்த ஆர்ட் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் வெளியிட்டோம்.

திருநங்கைகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. சர்வதேச மாடலிங் அழகி களுக்கு சவால்விடும் வகையில் இங்குள்ள திருநங்கைகள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களது அழகையும், ஆற்றலையும், நளினத்தையும் உலக அளவில் கொண்டு சேர்க்க இந்தியாவிலே முதல் முறையாக அவர் களுக்காக ‘தீம்’ உருவாக்கி, போட்டோ ஷூட் செய்திருக்கிறோம். அவர்களது திருமணம், தாய்மை உணர்வு, தாய்மைக்கான ஏக்கம், சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் அவலம், அவர்களது மகிழ்ச்சி, துக்கம், ஆசை போன்ற அனைத்தும் கலைவேலைப்பாடுகளுடன் படமாக்கப்பட்டு, கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த படங்கள் உலக அளவில் இனி ஏராளமான கண்காட்சிகளில் இடம் பெறும். இதன் மூலம் இந்திய திருநங்கைகளின் அழகும், ஆற்றலும் உலகம் முழுவதும் பேசப்படும்” என்றார், எல்.ராமச்சந்திரன்.

கண்காட்சியை பார்க்க வந்திருந்தவர்களிடம் குரோஷிய அழகி ஈனா பிரெட்ரிக் கலகலப்பாக உரையாடினார். “இந்த கண்காட்சி உலக அளவில் ஒரு புதுமை செய்திருக்கிறது. போட்டோவில் காட்சியாக இடம் பெற்ற என்னை போன்ற சர்வதேச அழகிகளும், அழகு நிறைந்த திருநங்கைகளும் நேரடியாகவும் இங்கு காட்சியளிப்பது மிக அபூர்வமானது” என்றார். அது உண்மைதான் என நிரூபிக்கும் விதத்தில் அவரையும், அவரது போட்டோவையும் சுற்றிச் சுற்றி நிறைய கேமிராக்கள் மின்னிக்கொண்டிருந்தன.

Next Story