நெற்குன்றத்தில் மழைநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்


நெற்குன்றத்தில் மழைநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2018 4:00 AM IST (Updated: 9 Sept 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

நெற்குன்றம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்காததை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை மாநகராட்சி 11–வது மண்டலத்துக்கு உட்பட்ட 148–வது வார்டில் உள்ள நெற்குன்றம் கோவர்த்தன் நகர் 4 மற்றும் 5–வது தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வீட்டுவாசல் முன்பு குளம்போல் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதுவரையிலும் மழைநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நேற்று அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–

நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. மழைநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீருடன் மழைநீரும் கலந்து குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் நாங்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். இனியும் இங்கு மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை என்றால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story