தமிழகத்தில் இன்று 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது - சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி


தமிழகத்தில் இன்று 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது - சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி
x
தினத்தந்தி 9 Sep 2018 11:15 PM GMT (Updated: 9 Sep 2018 7:41 PM GMT)

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு அளிக்கிறது. எனவே இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 108 டாலராக இருந்தபோது டீசல் லிட்டர் ரூ.61-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை 67 டாலராக குறைந்து உள்ள நிலையில், டீசல் விலை ரூ.77 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு சம்மேளனத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் லாரி தொழில் அழியும் அபாயம் இருந்து வருகிறது. எனவே பொதுமக்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story