உடுமலை பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
மடத்துக்குளம்
1–1–2019 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2019 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணையின் படி 1–9–2018 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய ஆயிரத்து 28 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளி ரோட்டில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் வாவிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் ப.வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் தாராபுரம் சாலை டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாக்காளர் பெயர் சேர்த்தல் என்பது உள்பட திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், வருகிற 23–ந் தேதி, அடுத்த மாதம் (அக்டோபர்) 7–ந் தேதி, 14–ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், தாசில்தார்கள் தங்கவேல் (உடுமலை), கலாவதி (மடத்துக்குளம்), கனிமொழி (பொறுப்பு) பல்லடம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதுபோல் திருப்பூரில் ஜெய்வாபாய்பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்பட பல இடங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.