சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 18–ந்தேதி முற்றுகை
சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 18–ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
கோவை,
கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.ஐ.டி.யு., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 18–ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
இதில் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த பத்மநாபன், கனகராஜ், பிரபாகரன், சிவஞானம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பத்மநாபன் கூறியதாவது:–
சூயஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் கோவை மாநகரில் உள்ள பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.