இரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்


இரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Sep 2018 9:33 PM GMT (Updated: 9 Sep 2018 9:33 PM GMT)

குஜிலியம்பாறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது.

குஜிலியம்பாறை, 


குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னுலுப்பை ஊராட்சி செல்லப்பட்டநாயக்கன்பட்டியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். இங்கு மாரியம்மன், பகவதியம்மன், காளியம்மன் ஆகிய கோவில்கள் இங்கு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் வரி வசூல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் திருவிழா தொடர்பாக கூட்டம் நடத்துவதும், பின்னர் வரி வசூல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினையில் திருவிழா நிறுத்தப்படுவதுமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தனியே கூட்டம் நடத்தி திருவிழா மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வரிவசூலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர், 20 வீட்டாரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களிடம் வரி வசூல் செய்யாமல், கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை நேற்று கொண்டாட முடிவு செய்தனர்.

இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து அதே ஊரை சேர்ந்த பொம்மன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழா நடத்த வேண்டும் என கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் திருவிழாவை ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என நேற்று முன்தினம் குஜிலியம்பாறை போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டு, ஒன்று சேர்ந்து திருவிழா நடத்த சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருவிழா நடத்த அனுமதிக்க முடியும் என கூறி, நேற்று நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை போலீசார் நிறுத்தினர்.

இக்கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக, 5 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story