விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு


விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sep 2018 11:14 PM GMT (Updated: 9 Sep 2018 11:14 PM GMT)

வேலூரில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு சதுப்பேரி ஏரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்,

விநாயகர் சதுர்த்தி விழா 13-ந்தேதி நடக்கிறது. அன்று விநாயகர் சிலைகளை வைத்து 3 நாட்கள் பூஜை செய்து, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பார்கள். இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் வைக்கப்படும் சிலைகளை கரைக்க வேலூரை அடுத்த சதுப்பேரி ஏரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் உள்ள தண்ணீரில் சிலைகளை கரைக்காமல், ஏரியின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை நிரப்பி சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இதற்காக மாநகராட்சி சார்பில் சதுப்பேரி ஏரியின் ஒரு பகுதியில் 30 மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் 12 அடி பள்ளம் தோண்டப்படுகிறது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நேற்று கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணியை பார்வையிட்ட கலெக்டர் அருகில் ஏரியில் தண்ணீர் கிடக்கும் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து கரைத்து விட்டு, வாகனங்களை எந்த வழியாக திருப்பி அனுப்புவது என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், ஏரியில் உள்ள தண்ணீரில் விநாயகர் சிலைகளை கரைத்தால், ஏரியில் உள்ள மீன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், தனியாக பள்ளம் தோண்டி சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது, என்றார். ஆய்வின்போது உதவி கலெக்டர் மேகராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜயக்குமார், உதவி கமிஷனர் மதிவாணன், தாசில்தார் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story