பொதுமக்கள் சேவைக்காக தூத்துக்குடியில், வார்டு வாரியாக போலீசார் நியமனம்


பொதுமக்கள் சேவைக்காக தூத்துக்குடியில், வார்டு வாரியாக போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 10 Sept 2018 5:26 AM IST (Updated: 10 Sept 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பொதுமக்கள் சேவைக்காக வார்டு வாரியாக போலீசார் நேற்று நியமிக்கப்பட்டனர். பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள், போலீஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் தயக்கமின்றி குறைகளை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டது. தற்போது, வார்டு வாரியாக போலீசாரை நியமிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி முத்துநகர் கடற்கரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி 20 வார்டுகளுக்கு 66 போலீசாரை நியமனம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக வார்டு வாரியாக போலீஸ் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதல்கட்டமாக வடபாகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 20 வார்டுகளில் பணியாற்ற 66 போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பார்கள். மக்கள் அவர்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய பகுதிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஒரு நோட்டும் பராமரிக்கப்படும். மக்கள் ஏதேனும் தகவல்கள் தெரிவிக்க விரும்பினாலும், புகார்கள் தெரிவிக்க விரும்பினாலும் புகார் பெட்டிகளில் எழுதி போடலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று போலீஸ் துறை தவிர, மற்ற துறை சார்ந்த புகார்களாக இருந்தாலும் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்கள் குறைகளையும், நல்ல பணிகளையும் தெரிவிக்கலாம். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாதிரியார் லயோலா, செயிண்ட்தாமஸ் பள்ளி முதல்வர் ஆஸ்கர், காமாட்சி அம்மன் கோவில் தர்மகர்த்தா மனோகரன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story