ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோலை கொண்டுவர மராட்டிய அரசு ஆதரவு


ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோலை கொண்டுவர மராட்டிய அரசு ஆதரவு
x
தினத்தந்தி 9 Sep 2018 11:57 PM GMT (Updated: 9 Sep 2018 11:57 PM GMT)

விலையை குறைக்கும் நடவடிக்கையாக ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர மாநில அரசு ஆதரவு அளிக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

மும்பை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறது.

பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவருவது விலைகளை குறைக்கும் வழிகளில் ஒன்றாகும்.

இருப்பினும் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு சிறந்த வழி அதை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவருவது தான். ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுகுறித்த திட்டத்தை முன்மொழிந்தால், மராட்டிய அரசு அதற்கு ஆதரவு அளிக்கும்.

பெட்ரோலிய பொருட்களின் விலை வெளிநாட்டு சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். இருப்பினும் தற்போதைய அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் மட்டும் 13 முறை பெட்ரோல் விலையை குறைத்தது. தற்போது பெட்ரோலுக்கான கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வதில் அவ்வளவு கவலை இருந்தால் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு வரி இல்லை என்று அறிவிக்கலாம்.

ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். காரணம் இது அனைத்தும் வெறும் அரசியல் உந்துதலுக்காக மட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story