மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி மனு
x
தினத்தந்தி 11 Sept 2018 4:15 AM IST (Updated: 10 Sept 2018 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட 3 பேரக்குழந்தைகளுடன் மனு கொடுத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் அங்கேரிப்பாளையம் குப்பாயி அம்மன்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 67). மூதாட்டியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 3 பேரகுழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது கணவர் ராமசாமி(75). ஊத்துக்குளி கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மகன் மயில்சாமி. இவருக்கு 18 மற்றும் 11 வயதில் 2 மகன்களும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்களை தவிக்க விட்டுவிட்டு எனது மகனான மயில்சாமி வேறொரு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். மயில்சாமியின் மனைவியும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளை நான் மட்டுமே கவனித்து வருகிறேன். தள்ளாடும் வயதில் இருக்கும் நான், குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவித்தொகையை வைத்து அவர்களையும் பராமரித்து எனது வாழ்க்கையும் நடத்தி வருகிறேன். பராமரிக்கவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறேன்.

இந்த நிலையில் நாங்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறும்படி எனது கணவரும், எனது மகனும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளோம். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் அதே வீட்டில் தொடர்ந்து குடியிருக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும், எனது இறப்பிற்கு பிறகு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story