திருட்டு வழக்கில் தொடர்புடைய துணை நடிகர் மனைவியுடன் கைது, 15 பவுன் நகை பறிமுதல்


திருட்டு வழக்கில் தொடர்புடைய துணை நடிகர் மனைவியுடன் கைது, 15 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:30 AM IST (Updated: 11 Sept 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய துணை நடிகர் மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், போத்தனூர் பகுதியில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தன. இதை தடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாநகர பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால், போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த சீனிவாசன் (வயது 35) என்பதும், இருசக்கர வாகனங்களில் சென்று, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, ஆர்.எஸ்.புரத்தில் 2 பெண்களிடமும், சிங்காநல்லூர் மற்றும் போத்தனூரில் தலா ஒரு பெண் என 4 பெண்களிடம் 15 பவுன் நகையை பறித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து சுந்தராபுரத்துக்கு சென்ற பஸ்சில் ஒரு பயணியிடம் பெண் ஒருவர் ரூ.10 ஆயிரத்தை திருடினார். உடனே பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அந்த பெண்ணை பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் சீனிவாசனின் மனைவி சூர்யா (30) என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் சூர்யாவையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

சீனிவாசன் துணை நடிகர் ஆவார். அவர் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்படும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடத்துள்ளார். 30–க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளதால் பணம் கிடைத்தது. அந்த பணம் மூலம் ஆடம்பரமாக வாழ்ந்த அவரால் வேலை செய்வதன் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியவில்லை.

இதனால் அவரும், அவருடைய மனைவியும் சேர்ந்து திருட முடிவு செய்தனர். அதன்படி சீனிவாசன் நகை பறிப்பிலும், சூர்யா கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்சில் சென்று பணத்தை திருடியும் உள்ளனர். ஏற்கனவே சீனிவாசன் மீது சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story